வாடிப்பட்டி-வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடம் பராமரிப்பின்றி இடியும் நிலையில் உள்ளது.இக்கட்டடம் 1982 ல் கட்டப்பட்டது. இதில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டது. பின் 1990 ல் இப்பள்ளி வேறு கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. ஓட்டுச்சாவடியாக மட்டுமே பயன்பட்ட ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடம் பயன்படாமல் போனது. முப்பதாண்டுகளாக காக்கும் கரங்கள் அறக்கட்டளையினர் மாதம் ஒரு முறை மட்டும் கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடத்தி வந்தனர். தற்போது கட்டடம் இடியும் நிலையில் உள்ளது. இதன் அருகே அங்கன்வாடி, அரசு துவக்கப்பள்ளி, குடியிருப்புகள் உள்ளன.ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி கூறுகையில், ''கலெக்டர் அனீஷ்சேகரிடம் அனுமதி பெற்று பழுதான கட்டடம் அகற்றப்படும். புதிய கட்டடம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.