திருப்பூர்:டயர் பஞ்சரானதால், திருப்பூரில் நடுவழியில், மூன்று மணி நேரம், அரசு பஸ் நிறுத்தப்பட்டது.கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பஸ் (டி.என்., 38 என் 3132), திருப்பூர் - பி.என்.,ரோடு, 60 அடி சாலையில் வந்த போது, கனரா வங்கி எதிர்புறம், முன்பக்க டயர் பஞ்சரானது.பஸ்சை டிரைவர் ஓரமாக நிறுத்தி, அவ்வழியாக வந்த வேறு பஸ்சில் பயணிகளை அனுப்பி வைத்தார். நடத்துனர், டிரைவர் இணைந்து, பஞ்சரான டயரை கழற்றி, மாற்று டயர் பொருத்த முயற்சித்தனர்.காலை 10:00 மணிக்கு பஸ் பஞ்சராகிய நிலையில், ஒன்றரை மணி நேரம் போராடியும் டயரை கழற்ற முடியவில்லை. கோவை கோட்ட அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், 'ஏதேனும் ஒரு டவுன் பஸ்சில் ஏறி, திருப்பூர் பணிமனை சென்று, அங்கிருந்து டயரை கழற்றும் ராடு எடுத்து வந்து, டயரை கழற்றி, வேறு டயர் பொருத்திக் கொள்ளுங்கள்,' என கூறினர்.கோட்ட அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவாக இருந்தாலும், பணியில் இருந்த டிரைவர், நடத்துனர் இருவருக்கு இங்குள்ள பணிமனை, அலுவலர் யாரையும் தெரியாததால், செய்வதறியது மதியம் 1:00 மணி வரை தவித்தனர். பின்னர், ஒருவரின் உதவியால் அருகில் உள்ள மெக்கானிக் கடையின் உதவியுடன் பஞ்சரான டயரை கழற்றி, வேறு டயர் மாற்றி, பஸ்சை அங்கிருந்து நகர்த்தினர்.போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில், டயரை கழற்ற மூன்று மணி நேரம் டிரைவர், நடத்துனர் தவித்ததை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பரிதாபத்துடன் பார்த்துச் சென்றனர்.போக்குவரத்து கழக உயரதிகாரிகள், திருப்பூரில் உள்ள அலுவலரிடம் மொபைல் போனில் பேசி, மெக்கானிக்கை அனுப்பினால், பஞ்சரான பஸ் எளிதில் இயக்கத்துக்கு வந்து விடும்.ஆனால், அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், கோவை - திருப்பூர் இடையேயான இரண்டு 'டிரிப்' நிறுத்தப்பட்டது. கலெக்ஷனும் நின்றது.