பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே மர்மநபர் நடமாட்டம் குறித்து, டெல்டா பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் ஊராட்சி, காமராஜர் நகரில் கடந்த 19ம்தேதி இரவு வடமாநில இளைஞர் போன்ற தோற்றமுடைய மர்ம நபர் காரில் இருந்து இறங்கி, முட்புதரில் பதுங்கி, அவ்வழியே சென்ற மக்களை மிரட்டினார்.
அச்சமடைந்த மக்கள் கூச்சலிட இளைஞர்கள் ஓடிவந்து மர்ம நபரை துரத்திச் சென்றனர். ஆனால் அவர் தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக கடந்த 20ம் தேதி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.எஸ்.பி., சக்திகணேசன் அறிவுறுத்தலின்பேரில், டெல்டா பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையிலான போலீசார் 2 நாட்களாக பெண்ணாடம் பகுதிகளில் பொருத்தப்பட்ட 40க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான சந்தேக நபர்கள் குறித்து வீடியோ ஆதாரங்களை சேகரித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.