திருப்பூர்:மங்கலம், சுல்தான்பேட்டை ஆதிதிராவிடர் காலனி அருகே, குப்பைக்கு தீ வைத்ததால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.மங்கலம் ஊராட்சி சுல்தான்பேட்டை பகுதியில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. காலனி அருகே உள்ள பாறைகளில் ஊராட்சி நிர்வாகம் குப்பையை கொட்டி தீ வைப்பதாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.குப்பையில் தீ வைப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக கூறி, கடந்த மாதம் போராட்டம் நடந்தது. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், குப்பை கொட்ட கூடாது என அறிவுறுத்தினர். அப்பகுதியை சுத்தம் செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.இந்நிலையில் மீண்டும் குப்பையை கொட்டி பாறைகளில் தீ வைத்துள்ளதால், கடந்த இரண்டு நாட்களாக, அப்பகுதி புகை மூட்டமாக காணப்படுகிறது.குப்பையில் இருந்து வரும் புகையால், முதியவர்கள், குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.எனவே, பாறை குழியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். குப்பைக்கு தீ வைப்பதை, ஊராட்சி நிர்வாகம் நிறுத்திக்கொள்ள வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.