விழுப்புரம் : விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் சேதமாகியுள்ள உள் விளையாட்டு அரங்கை புதுப்பித்து தரக்கோரி, விளையாட்டு வீரர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து விளையாட்டு வீரர்கள் கோபாலகிருஷ்ணன், டாக்டர் கண்ணன், சுரேஷ் மற்றும் பலர் அளித்துள்ள மனு:நாங்கள் கடந்த 17 ஆண்டுகளாக கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இறகு பந்து உள் விளையாட்டு அரங்கில் விளையாடுகிறோம். இந்த அரங்கம் சிறப்பு தன்னிறைவு திட்டத்தில் அரசு ஊழியரான எங்களின் பங்களிப்போடு கட்டப்பட்டுள்ளது.அதன் பின், கூடுதலாக விளையாட்டு வீரர்கள் இருந்ததால் அப்போதைய கலெக்டரிடம் தெரிவித்து கூடுதலாக மற்றொரு உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது.
இந்த இரு அரங்கிலும் கடந்த 2008ம் ஆண்டு அப்போதிருந்த கலெக்டர் மூலம் சிந்தடிக் போடப்பட்டு, எங்களில் ஒருவர் இதை நிர்வகித்து வந்தார். பின், சில நிர்வாக காரணங்களால் இந்த இரு விளையாட்டு அரங்கமும், மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு நல்ல முறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதில், முதலில் துவங்கிய உள் விளையாட்டு அரங்கம் தரை தளம் சேதமாகியுள்ளது. தற்போது சில தினங்களுக்கு முன் பெய்த மழையால் உள் விளையாட்டு அரங்கம் முழுதும் சேதமாகி விளையாட முடியாத சூழலில் உள்ளது.எனவே, விளையாட்டு அரங்கை புதுப்பித்து தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.