கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் நாளை நடக்கும் சம்ப்ரோக்ஷண பணிகளை அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் சம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு நேற்று, முதல் கால யாக சாலை பூஜைகள் துவங்கியது.
சோளிங்கர் கந்தாடை சண்டமாருதம் குமார தொட்டையாச்சாரியார் சுவாமிகள், மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமிகள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் பூஜை நடத்தி வருகின்றனர். மூலவர் அஷ்டபந்தனம் சாற்றுதல், இரவு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இன்று (22ம் தேதி) மாலை உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.நாளை 23ம் தேதி காலை 9:00 மணிக்கு பூர்ணாகுதி, 9:20 மணிக்கு யாத்ராதானம், 9:50 மணிக்கு கும்பங்கள் புறப்பாடு, 10:15 மணிக்கு சம்ப்ரோக்ஷணம் நடக்கிறது. சம்ப்ரோக்ஷண பணிகளை அய்யப்பன் எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு செய்து, திருப்பணி குழுவினரிடம் ஆலோசனை நடத்தினார்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளி பின்பற்றியும் சம்ப்ரோக்ஷணத்தை சிறப்பாக நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின், மூலவருக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். கோவில் தக்கார் சுபத்ரா, செயல் அலுவலர் ரமேஷ் பாபு, தலைமை எழுத்தர் ஆழ்வார், தலைமை அர்ச்சகர் தேவநாதன், முன்னாள் சேர்மன் தங்கராசு, நகர செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் குணசேகரன், சன் பிரைட் பிரகாஷ், ராஜா உடனிருந்தனர்.