கடலுார் : நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சிகள் நேர்க்காணல் நடத்தி வருவதால், அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
தமிழகத்தில், 2016ம் ஆண்டு நடத்த வேண்டிய உள்ளாட்சித் தேர்தல், சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, மூன்றாண்டுகளுக்கு பிறகு 2019ல் நடத்தப்பட்டது. அடுத்து, விடுபட்ட 9 மாவட்ட ஊராட்சிகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் நடத்தப்பட்டது.மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, 2022க்குள் உத்தரவிட்டது.கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் பலரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக, விசாரணை நடந்து வருகிறது.ஆனாலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் பணியை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.முதற்கட்டமாக வார்டு வாரியாக, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்தலை சுமுகமாக நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம், நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது. எனவே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.கட்சிகள் சுறுசுறுப்பு கடலுார் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். கடந்த நவம்பர் மாதமே தி.மு.க.,-அ.தி.மு.க.,- பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள், தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனுக்களை பெற்று, நேர்காணலை நடத்தி வருகிறது.கடந்த மாதம் 25ம் தேதி அமைச்சர் பன்னீர்செல்வம் கடலுாரில் தி.மு.க., வினரிடம் விருப்ப மனு பெறும் பணியை துவக்கி வைத்தார்.
அடுத்து, அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னிலையில், 30 ம் தேதி நேர்க்காணல் நடத்தப்பட்டது. வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கடலுாரில் கடந்த மாதம் 27ம் தேதி விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, நேற்று முன்னாள் அமைச்சர் சம்பத் முன்னிலையில், நேர்க்காணல் நடந்தது. கடந்த மாதம் 30 ம் தேதி கடலுாரில் மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் முன்னிலையில் பா.ம.க, வினர் விருப்ப மனு பெற்றனர். மேலும், காங்., - வி.சி., .உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றன. நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து முக்கிய பதவிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன், ஆளும் கட்சியான தி.மு.க., களமிறங்க தயாராகி வருகிறது.
அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை நடந்து முடிந்த ஊரக தேர்தலில் சில ஒன்றிய கவுன்சிலர் பதவியை மட்டுமே பிடிக்க முடிந்ததால், நகர்புற தேர்தலில் பெருமளவில் வெற்றி பெற வேண்டும் என, வியூகம் வகுத்து கட்சியினரை தயார்படுத்தி வருகிறது. பா.ம.க.,- காங்.,- பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணிகளிடம் இது தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தையை துவக்கிவிட்டன. இதனால் கடலுார் மாவட்டத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.