கோவை:கோவை காந்திமாநகரில் நடந்த படுகொலை தொடர்பாக ஐந்து பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை, ஆலோசனை குழுமம் உறுதி செய்துள்ளது.கோவை காந்திமாநகரை சேர்ந்தவர் அசோக் குமார், 26; கட்டட தொழிலாளி. கடந்த நவம்பரில் படுகொலை செய்யப்பட்டார். அதற்கு சில நாட்கள் முன், சமூக வலைதளத்தில், அரிவாளுடன் நிற்கும்படியான படத்தையும், அத்துடன் சில வாசகங்களையும் பதிவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதலில், அவரை ரவுடி கும்பல் ரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் துரத்திச்சென்று வெட்டிக் கொன்றது.விசாரணை நடத்திய போலீசார், படுகொலையில் தொடர்புடைய ரவுடிகள் விக்கி சண்முகம், பாபு (எ) சிவா, பிரசாந்த், அமர்நாத், சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனர்.இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில், ஓராண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவு தொடர்பான விசாரணை, சென்னையில் குண்டர் சட்ட வழக்குகளை ஆய்வு செய்யும் ஆலோசனை குழுமத்தில் நடந்தது.இதில் கொலை சம்பவத்தின் தன்மை, அதில் ஈடுபட்ட நபர்களின் பங்கு பற்றி விரிவாக ஆராயப்பட்டது. முடிவில், 'ஐந்து பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைத்த போலீஸ் கமிஷனரின் உத்தரவு சரியானது தான்' என்று ஆலோசனை குழுமம் உத்தரவிட்டது.