கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தைப்பூசம் நாளன்று நடந்த 'ஹாலிடே' பத்திரப்பதிவு முறையில் 3.80 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தைப்பூசம் நாளான கடந்த 18ம் தேதி ஹாலிடே சிறப்பு பத்திரப் பதிவு நடந்தது.
நிலம் மற்றும் வீட்டு மனைகள், வீடுகள் வாங்குபவர்கள் பெரும்பாலும் 'நல்ல நாள்மற்றும் நேரம்' பார்த்து வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.கடந்த 18ம் தேதி தைப்பூச நாளில், வளர்பிறை திதியும் சேர்ந்திருந்திருந்ததால் அன்றைய நாளில் நிலம், வீட்டு மனை வாங்க பலர் ஆர்வம் காட்டினர். 'ஹாலிடே' பதிவு முறையிலான பதிவுக்காக ஆவண எழுத்தர்கள் மற்றும் நிலம் அல்லது வீட்டுமனை மற்றும் வீடு வாங்குபவர்கள், இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து டோக்கன் பெற்றிருந்தனர்.
அதனையொட்டி தைப்பூசம் நாளன்று அரசு விடுமுறையாக இருப்பினும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் செயல்பட அறிவுறுத்தப்பட்டது.மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி சார்பதிவாளர் எண்.1 மற்றும் எண்.2, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், எலவனாசூர்கோட்டை உட்பட 14 சார்பதிவாளர் அலுவலகங்களும்இயங்கின.
இதில், கள்ளக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகம் எண்.2ல் 4, சின்னசேலத்தில் 10, எலவனாசூர்கோட்டையில் 8, வடபொன்பரப்பியில் 4, சங்கராபுரத்தில் 3 என மொத்தம் 29 பத்திர பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.இதன் மூலம் அர சுக்கு 3 லட்சத்து 82 ஆயிரத்து 50 ரூபாய் வருவாய்கிடைத்தது.