கோவை:'பருத்தி விலை சீரடையாத பட்சத்தில் வேலை இழப்பால், மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும்' என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர்.கடந்த சில மாதங்களாக பருத்தி விலையும், பஞ்சு மற்றும் நுால் விலையும் உயர்ந்து வருகிறது. அபரிமிதமாக உயரும் விலையை பார்த்து ஜவுளி உற்பத்தியாளர்கள் மிரண்டுபோயுள்ளனர். தென் இந்திய நுாற்பாலைகள் சங்க (சிஸ்பா) தலைவர் செல்வன் கூறியதாவது:பஞ்சு மற்றும் நுால் விலை அதிகரிப்பதால் தொழில் ஸ்தம்பிக்குமோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இத்தொழிலை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் இருக்கின்றனர். தொழில் நசிந்து வேலை இழப்பு ஏற்பட்டால் பொருளாதார இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.வெளிநாடுகளுக்கு பஞ்சு ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும். இறக்குமதிக்கு விதிக்கப்படும் 11 சதவீத வரியை நீக்க வேண்டும். இந்திய பருத்திக்கழகம், ஜவுளித்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே பஞ்சு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து, தொழில் அமைப்புகள் மத்திய அரசிடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. மத்திய அரசு நிச்சயம் கவனத்தில் கொள்ளும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.