புதுச்சேரி : புதுச்சேரியில் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை என்.ஆர்.காங்., கூட்டணி நிறைவேற்றவில்லை என, இந்திய கம்யூ., தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் அவர், கூறியதாவது;புதுச்சேரியில் கடந்த காங்., ஆட்சியின்போது மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் கிரண்பேடி அதிகபட்ச இடையூறுகளை கொடுத்து, மாநில அரசிற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டார்.தேர்தலில் என்.ஆர்.காங்., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெற்று பல்வேறு உதவிகளை செய்வோம் என்றனர்.
இவர்கள் எதிர்பார்த்தது போல் எந்த நிதியும் மத்திய அரசிடமிருந்து வரவில்லை.புதுச்சேரி அரசில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளது. பணியில் உள்ள 10 ஆயிரம் பேருக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. பொங்கல் பொருட்கள் இதுவரை வழங்கவில்லை.புதுச்சேரியில் கொரோனா மூன்றாவது அலை மோசமாக உள்ளது. பொறுப்பில்லாமல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதியளித்ததால், கடந்த டிசம்பர் 30ல் 15 ஆக இருந்த தொற்று ஜனவரி 20ல் 3,000 ஆக உயர்ந்துள்ளது.மத்தியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னர்கள் ஒற்றர்களாக பயன்படுத்தபடுகின்றனர். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.மத்திய அரசு தொடர்ந்து பல தவறான நடவடிக்கைகளை எடுக்கிறது. மின்சார திருத்த மசோதா என்பது மின்துறையை தனியாருக்கு கொடுக்கும் மோசமான செயல். இதனால் மின் கட்டணம் உயர்ந்துள்ளது.மின் தனியார் மயமாக்கலை எதிர்த்தும், கட்டண உயர்வை கண்டித்தும் இந்திய கம்யூ., போராட்டம் நடத்தும். புதுச்சேரி, காரைக்கால் விவசாயிகளின் நலன் கருதி, மாநில அரசு கொள்முதல் நிலையங்கள் திறந்து, நெல் கொள்ளமுதல் செய்யவேண்டும்
.குடியரசு தின விழா அணி வகுப்பிற்கு தமிழகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட அலங்கார வாகனங்களை மத்திய அரசின் நிபுணர் குழு நிராகரித்துள்ளது கண்டிக்கத்தக்கது.விடுதலை போராட்டத்திற்கு பா.ஜ., விற்கும், அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.,க்கும் எந்த பங்கும் இல்லை.தமிழகத்தில் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடந்து வருவதாக ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., கூறி வருகின்றனர். அடுத்து அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படலாம். தமிழக நகர் புற உள்ளாட்சி தேர்தலிலும் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.