புதுச்சேரி : சிறையில் 4ஜி மொபைல் போன் வைத்திருந்த கைதி மீது வழக்கு பதிந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி வாணரப்பேட்டையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய வினோத்,24, என்பவரை போலீசார் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
அவரது காலில் ஏற்பட்ட காயத்திற்காக சில நாட்களுக்கு முன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதி யார்டில் கடந்த 17ம் தேதி இரவு 7.45 மணியளவில் சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான காவலர்கள் சோதனை நடத்தினர்
.அப்போது, வினோத் காலில் போடப்பட்டு இருந்த கால் கட்டு வழக்கத்திற்கு மாறாக பெரிதாக இருந்தது. அவரது கால் கட்டினை பிரித்து பார்த்தபோது அதில், மொபைல் போன், 4 ஜி, சிம் இருந்தது. அதனை பறிமுதல் செய்த சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் இது குறித்து காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில், வினோத் மீது காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை துவக்கியுள்ளனர். அவருடன் பேசியவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து, விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.