பல காரணங்களால் மத்திய வரித்துறை ஏற்றுமதி நிறுவனங்களை, 'ரிஸ்கி' பட்டியலில் சேர்க்கிறது. இத்தகைய நிறுவனங்களுக்கு, 'ரீபண்ட்' தொகை வழங்காமல் நிறுத்தப்படுகிறது.அப்படி நிறுத்தப்படும் தொகையை பெற, கோவை மண்டலத்திலுள்ள ஜி.எஸ்.டி., அலுவலகங்களில் சரிபார்ப்பு முகாம் நடைபெற்றது.
கோவை மத்திய ஜி.எஸ்.டி., முதன்மை கமிஷனர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:அரசு வழங்கும் சலுகைகளை தவறாக பயன்படுத்துவது, போலி ரசீதுகளை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளால், சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்றுமதியாளர்கள் சிலர், 'ரிஸ்கி' பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர்.
அப்படி சேர்க்கப்படுபவர்களின் பொருட்கள், நுாறு சதவீதம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, ஜி.எஸ்.டி.ரீபண்ட் நிறுத்தி வைக்கப்படுகிறது.ஆவணங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 'ரிஸ்கி' பட்டியலிலிருந்து ஏற்றுமதியாளர்கள் படிப்படியாக விடுவிக்கப்படுகின்றனர். அவ்வகையில், இருநுாறு ஏற்றுமதியாளர்கள் 'ரிஸ்கி' பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.