குன்னுார்: குன்னுார் அருகே குடியிருப்பு பகுதியில், இரு சிறுத்தைகள், மூன்று கரடிகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே, கரிமொராஹட்டி கிராமம் உள்ளது. இங்கு குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் வனவிலங்கு நடமாட்டம் இருப்பது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இரவில் இரு சிறுத்தைகள், மூன்று கரடிகள் நடமாடுவதும், கரடிகள் அங்கிருந்த உரமூட்டையை இழுத்து செல்வதும் கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நேற்று வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் கூறுகையில்,'கிராமம் அருகே கொட்டப்படும் உணவு கழிவுகளை தேடி வனவிலங்குகள் வருகின்றன. இங்கு உணவு கழிவு கொட்டுவதை தடுக்க, உபதலை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.