ஓமலூர்: காடையாம்பட்டி வட்டாரம், 'அட்மா' திட்டத்தில், மானாவாரி வேளாண் தொழில்நுட்பம் குறித்த கண்டுணர்வு சுற்றுலாவுக்கு, நேற்று, 50 விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்டம், பையூரில் உள்ள மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்துக்கு புறப்பட்டனர். அவர்களை வேளாண் உதவி இயக்குனர் நாகராஜன் வழி அனுப்பிய பின் கூறியதாவது: இப்பயிற்சியில் மானாவாரி விவசாயிகளின் வாழ்வாதாரம் அதிகரிக்கும்பொருட்டு மானாவாரி பயிர்களான கம்பு, சோளம், ராகி, சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரித்து, உணவு உற்பத்தியை பெருக்கும் தொழில்நுட்பம், நுண்ணீர் பாசனம் மூலம் நீர் சேகரிப்பு, மறு சுழற்சி, பண்ணைக்குட்டை அமைத்தல், மண் அரிப்பை தடுத்தல், தானியங்களை மதிப்பு கூட்டி அதிக விலைக்கு விற்பது, மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் பயன்பாடு ஆகிய தொழில்நுட்பங்களை, நேரடியாக கண்டு பயிற்சி பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.