புது வகை திரவ உயிர் உரம் உற்பத்தி: இணை இயக்குனர் தகவல் | சேலம் செய்திகள் | Dinamalar
புது வகை திரவ உயிர் உரம் உற்பத்தி: இணை இயக்குனர் தகவல்
Added : ஜன 22, 2022 | |
Advertisement
 

சேலம்: வேளாண் துறை உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில், சாம்பல் சத்தை அளித்திடும் புது வகை திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுகுறித்து, சேலம் வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன்(பொ) வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில், புது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடப்பு நிதியாண்டில், 50 ஆயிரம் லிட்டர் திரவ நிலை உயிர் உரங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திரவ நிலை உயிர் உரங்கள் உற்பத்தி செய்த நாளில் இருந்து, 12 மாதம் வரை குறைந்தபட்சம் ஒரு மில்லி லிட்டருக்கு, 10 கோடி நுண்ணுயிர் செல்கள் உள்ளபடி உற்பத்தி செய்யப்படுவதால், குறைந்த அளவே பயிர்களுக்கு போதுமானது. இந்த மையத்தில் உற்பத்தி செய்யப்படும் அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, அசோபாஸ் ஆகிய உயிர் உரங்களுடன், கடந்த நிதியாண்டில் இருந்து மண்ணில் சாம்பல் சத்தை மேம்படுத்தி விடுவித்து பயிர்களுக்கு அளித்திடும் திரவ பொட்டாஷ் பாக்டீரியா எனும் புது உயிர் உரத்தை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த உரத்தை பயன்படுத்தினால் ஏக்கருக்கு, 25 கிலோ வரை ரசாயன பொட்டாஷ் உரங்களின் பயன்பாட்டை குறைக்கலாம். நடப்பு நிதியாண்டில் சேலம் உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில், இதுவரை, 2,814 லிட்டர் திரவ பொட்டாஷ் பாக்டீரியா உற்பத்தி செய்யப்பட்டு சேலம் மாவட்டத்தின் பல்வேறு வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. மக்கள், விவசாயிகள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், 500 லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா திரவ உரத்தை, 150 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்க செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X