கொளத்தூர்: அங்காளம்மன் தெவத்தை முன்னிட்டு, கொளத்தூர் சந்தையில் ஆடுகள் விலை அதிகரித்தது. சேலம் மாவட்டம், கொளத்தூரில் சேத்துக்குழி, தானமூர்த்திகாடு, நரியனூர் ஆகிய இடங்களில் அங்காளம்மன் கோவில்கள் உள்ளன. அந்த சுவாமியை வழிபடும் பங்காளி குடும்பத்தினர், கொளத்தூர், வெளியூர்களில் வசிக்கின்றனர். அவர்களில் ஒவ்வொரு குடும்பத்தினரும், சில ஆண்டுக்கு ஒருமுறை, அங்காளம்மன் கோவிலில் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவர். அதன்படி, ஒன்பது ஆண்டுக்கு பின், வரும், 25ல் அங்காளம்மன் தெவத்தை முன்னிட்டு, கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி, பக்தர்கள் கிடா வெட்ட முடிவு செய்துள்ளனர். அன்று மட்டும், 500க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்படும். இந்நிலையில், கொளத்தூரில் நேற்று ஆட்டுச்சந்தை கூடியது. அதில், பக்தர்கள் பலர், கிடா வாங்க குவிந்தனர். வழக்கமாக, 8,000 ரூபாய்க்கு விற்கப்படும் ஆடுகள், 500 முதல், 1,500 ரூபாய் வரை விலை உயர்ந்தது. அத்துடன், குறுகிய நேரத்தில் சந்தை முடிந்ததால் வெளியூர் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.