கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே குட்டூரை சேர்ந்த, 21, வயது பட்டதாரி பெண் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் காவேரிப்பட்டணம் போலீசில் அளித்த புகாரில், ராமாபுரத்தை சேர்ந்த சூர்யா, 23, என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். கந்திகுப்பம் அருகே சின்ன பனகமுட்லுவை சேர்ந்த, 17 வயது சிறுமி தனியார் மில்லில் வேலை செய்கிறார். இவர் காணாமல் போனது குறித்து, அவரது பெற்றோர் கந்திகுப்பம் போலீசில் அளித்த புகாரில், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த பூவரசன், 25, என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். நாகரசம்பட்டி அருகே காவாப்பட்டியை சேர்ந்த, 23 வயது பெண், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். அதே ஊரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் மாயமானார். இது குறித்து இளம்பெண்ணின் கணவர் நாகரசம்பட்டி போலீசில் புகார் செய்தார். மத்தூர் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த, 19 வயது இளம் பெண் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் கொடுத்த புகார்படி மத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர். சிங்காரப்பேட்டை அருகே கொடலவலசையை சேர்ந்தவர் சின்னபாப்பா, 40. திருப்பத்தூர் மருத்துவமனைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரது கணவர் பரமசிவம் அளித்த புகார்படி சிங்காரபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.