கிருஷ்ணகிரி: படேதலாவ் ஏரியில் வளர்ந்துள்ள, கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில், 269 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது படேதலாவ் ஏரி (பெரிய ஏரி). மார்க்கண்டேய நதியில் இருந்து வாய்க்கால் மூலம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதன் மூலம் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில், 9 ஊராட்சிகளும், பர்கூர் ஒன்றியத்தில், 11 ஊராட்சிகளில், 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால் மார்க்கண்டேய நதியில் தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றதால், படேதலாவ் ஏரியும் வறண்டது. 2019ல் ஆந்திரா மாநில எல்லை மற்றும் மாவட்டம் முழுவதும் பெய்த கன மழையால் மார்க்கண்டேய நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து வாய்க்காலில் தண்ணீர் வந்ததால், 12 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியது. பின்னர் மழை இன்றி, ஏரியில் தண்ணீர் படிப்படியாக வறண்டதால், ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்தனர். கடந்த மாதம் பெய்த பலத்த மழையால், மார்க்கண்டேய நதியில் இருந்து ஏரிக்கு தண்ணீர் வந்தது. ஆனாலும் தற்போது ஏரி வறண்டு காணப்படுகிறது. ஏரியில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால், ஏரிக்கு வந்த தண்ணீர் முழுவதும் உறிஞ்சப்பட்டு ஏரி வறண்டுள்ளது. எனவே ஏரியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும். எண்ணேகொள்புதூர் வாய்க்கால் திட்டத்தின் மூலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.