ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சின்னாறு அணை கடந்த, 2017 செப்., மாதம் நிரம்பியது. அதன்பின் போதிய மழை இல்லாததால் அணை வறண்டு காணப்பட்டது. அணையின் நீர்வரத்து கால்வாய்கள் விவசாயிகள் மூலம் சுத்தம் செய்யப்பட்டதால், மருதாண்டப்பள்ளி மற்றும் சூளகிரி துரை ஏரி வரை வந்த கெலவரப்பள்ளி அணை உபரிநீர், சின்னாறு அணைக்கு திருப்பி விடப்பட்டது. இதனால் கடந்த, 12ல் சின்னாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இந்த அணை நிரம்ப கால்வாய்களை தூர்வாரி விவசாயிகளுக்கு உதவியாக இருந்த, சின்னார் ராமசாமி, ஜெகதீஸ், நந்தகுமார் ஆகியோரை ஏழு கிராம மக்கள் பாராட்டி, மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும், கிராமப்புறங்களில் பாராட்டி நோட்டீஸ் ஒட்டினர். அத்துடன், சின்னாறு அணையில் தெப்பம் விட்டு, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.