நீரில் மூழ்கி பெண் பலி
மதகுபட்டி: சென்னை வேளச்சேரி சேகர் மகள் ஜெனிபர் 22. பொங்கலுக்காக மதகுபட்டியில் உள்ள சித்தி வீட்டிற்குவந்துள்ளார். ஜன.,21 அன்று மாலை 4:30 மணிக்கு சொக்கனேந்தல் கண்மாயில் குளித்தபோது நீரில் மூழ்கி பலியானார். இன்ஸ்பெக்டர் ஜெயராணி விசாரிக்கிறார்.
காளை முட்டி முதியவர் பலி
எஸ்.வி.,மங்கலம்: மதுரை மாவட்டம், மேலுார் அருகே கீழநாட்டார்மங்கலம் சின்னக்காளை 65. இவர் ஜன.,15 அன்று ஏ.காளாப்பூரில் செல்லியம்மன் கோயில் பொங்கல் விழா மஞ்சுவிரட்டை காண வந்தார். அப்போது வேகமாக வந்த காளை ஒன்று இவரை இடித்து தள்ளி சென்றதில் தலையில் காயம் ஏற்பட்டது.மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் பலியானார். இன்ஸ்பெக்டர் விஜயன் விசாரிக்கிறார்.
தற்கொலை
மானாமதுரை: ராமநாதபுரம் மாவட்டம், பீர்க்கன்குறிச்சி கண்ணன் மனைவி கோமதி 27. மானாமதுரை அருகே குவளைவேலியில் கணவருடன் வசித்து வருகிறார். இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் ஜன., 20 அன்று இரவு 7:30 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ் விசாரிக்கிறார்.
ரூ.2.97 லட்சம் மோசடி4 பேர் மீது வழக்கு
மானாமதுரை: மானாமதுரை சியோன் நகர் மாரிமுத்து மகன் ராஜாஜி 28. பி.இ., முடித்த இவர் வெளிநாடு செல்ல 2018ம் ஆண்டு ஜூலை 4 ம் தேதி ஆசிரியர் தெரு காவேரி மகன் சாமுவேல் 42, என்பவரிடம் மதுரை திருநகரை சேர்ந்த ஜெகதீசன் மகன் மோகன் 46, இவரது மனைவி ஜெயந்தி 38, ஜெயராமன் மகன் ஜெகதீசன் 24 ஆகியோர் முன்னிலையில் ரூ.2.97 லட்சம் கொடுத்தார். ஆனால் சாமுவேல் வெளிநாடு அனுப்பாமல், பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றினார். மானாமதுரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். நீதிபதி உத்தரவுபடி 4 பேர் மீதும் எஸ்.ஐ., முருகானந்தம் வழக்கு பதிந்தார்.
அலைபேசி டவர் திருட்டு
மானாமதுரை: சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்தவர் அகிலன் 44. இவர் அலைபேசி நிறுவன டவரின் திட்ட பொறியாளராக உள்ளார். 2021 ஜூன் 21ம் தேதி மானாமதுரை ரயில்வே கேட் அருகே சின்னழகு என்பவரது நிலத்தில் வைத்திருந்த டவரை ஆய்வு செய்ய வந்தார். அப்போது அங்கிருந்த டவர், ஜெனரேட்டர், அலுமினிய தகடுகள், மின்னனுசாதனங்கள் என ரூ.28.60லட்சம் மதிப்புஉள்ள பொருட்களை யாரோ திருடி சென்றது தெரிந்தது. மானாமதுரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் செய்தார். நீதிமன்ற உத்தரவுபடி எஸ்.ஐ., முருகானந்தம் வழக்கு பதிந்தார்.
வரதட்சணை கணவர் கைது
சிவகங்கை: சிவகங்கை அருகே அகிலாண்டபுரம் சத்தியராஜ் மனைவி ரூபினாஜெயசீலி 30. இருவரும் 2014 மே 12ம் தேதி திருமணம் செய்தனர். திருமணத்தின் போது சீதனமாக 45.5 பவுன் நகை, ரூ.5 லட்சம் சீர் வரிசை பொருட்கள், ரொக்கம் 2 லட்சம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் கணவர் சத்தியராஜ் 35, அவரது தாய் சாந்தி 52, தந்தை அசோக்குமார் 58, சகோதரர் பிரேம் ஆனந்த் 30 ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயராணி வழக்கு பதிந்து, பெண்ணின் கணவர் சத்தியராஜை கைது செய்தார்.