காரைக்குடி, : கல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், வகுப்பறைக்கட்டட பிரச்னை காரணமாக பெற்றோர்கள் மாணவர்களைவேறு பள்ளியில் சேர்க்க தயாராகி வருகின்றனர்.கல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1917ல் தொடங்கப்பட்டது. நுாற்றாண்டு விழா கண்ட இப்பள்ளியில், 2018-19ல் 100 மாணவர்கள் மட்டுமே படித்து வந்த நிலையில், தற்போது 227 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர். நான்கு வகுப்பறை மட்டுமே இருந்த நிலையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அருகிலேயே கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது.100 மாணவர்கள் இருந்தபோது, இந்த கூடுதல் வகுப்பறை கட்டடத்தில் வட்டார கல்வி அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது 227 மாணவர்கள் படித்து வரும் நிலையில் நான்கு வகுப்பறை கட்டடம் போதுமானதாக இல்லை. மாணவர்களுக்காக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், வட்டார கல்வி அலுவலகத்தை அதிகாரிகள் காலி செய்ய மறுத்து வருகின்றனர். 4 வகுப்பறைக்குள் 227 மாணவர்கள் அமரும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் கல்வி அதிகாரிகளோ, வட்டாரவளர்ச்சி அலுவலர்களோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவி சித்ரா கூறுகையில், நான்கு வகுப்பறையில் 227 மாணவர்கள் அமர்ந்து உள்ளனர். மாணவர்களுக்கு போதிய இடமின்றி மாணவர்கள் மூச்சுவிடவே சிரமப்படுகின்றனர். மாணவர்களுக்காக கட்டப்பட்ட வகுப்பறையை வட்டார கல்வி அதிகாரிகள் காலி செய்ய மறுக்கின்றனர். இதனால் பெற்றோர்கள் அனைவரும் மொத்தமாக மாணவர்களின் டி.சி.யை வாங்கி செல்ல முடிவு செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.பள்ளி நுாற்றாண்டு விழா கமிட்டி தலைவர் வடிவேல் கூறுகையில், மாணவர்களுக்காக கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தை வட்டாரக் கல்வி அதிகாரிகள் காலி செய்ய மறுப்பது வேதனை அளிக்கிறது. போதிய இட வசதியின்றி மாணவர்களுக்கு அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், மாவட்ட கல்வி அலுவலரிமுடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றார்.