ஆத்துார்:ஆத்துார், சித்தையன்கோட்டை, சின்னாளபட்டியில் உள்ளாட்சி நிர்வாகங்களின் மெத்தனத்தால் நாய்க்கடி பிரச்னை பூதாகரமாகி வருகிறது.ஆத்தூர் ஒன்றியத்தின் 22 கிராம ஊராட்சிகள், சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகளில், கழிவு மேலாண்மையில் அலட்சியம் உள்ளது. இறைச்சிக் கழிவுகளை குவிப்பதால் சுகாதாரக்கேடு மட்டுமின்றி, தெரு நாய்கள் தொற்றால் பாதிக்கின்றன. இந்த நாய்களின் தாக்குதலால், பலர் காயங்களுடன் சிகிச்சைக்கு வருகின்றனர்.நேற்று பெரும்பாறை சுப்பிரமணி 56, நாய்கள் கடித்ததில் இடது கை கட்டைவிரல் துண்டிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் வந்தார். சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆத்தூர் அரசு மருத்துவமனையில், தினமும் நாய்க்கடி சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சுகாதாரத்துறையினர் கூறுகையில், ''கழிவு மேலாண்மை, தெருநாய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் உள்ளாட்சி அமைப்புகள் மெத்தனமாக உள்ளன. தெருநாய்களுக்கு தடுப்பூசி, ரேபிஸ் பாதித்தோருக்கு 4 தவணை தடுப்பூசி அவசியம். இதுகுறித்த அறிவுறுத்தல்களை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும்" என்றனர்.