தேனி:கொட்டை முந்திரியில் இலைகருகல் நோயை கட்டுப்படுத்துவது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.ஆண்டிபட்டி மொட்டனுாத்து, ஜி.உசிலம்பட்டி, இராமலிங்காபுரம், கணேசபுரம், கண்டமனுார், கடமலைக்குண்டு, வருஷநாடு பகுதிகளில் 2124 எக்டேரில் கொட்டை முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது இலைகருகல், பின்கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டிபட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் துரைச்சாமி, பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி பயிர் பாதுகாப்பு துறையை சேர்ந்த முத்தையா, கலையரசன், செந்தில்ராஜா களஆய்வு செய்து கூறியதாவது:பின்கருகல் நோயுற்ற இடத்துக்கு கீழ் பாதித்த கிளைகளை வெட்டி அகற்றி அதில் காப்பர் ஆக்ஸி குளோரைடு பசை பூச வேண்டும். டைபேனோகோனசோல் மருந்தை 15 நாள் இடைவெளியில் ஒருலிட்டர் நீரில் 5 கிராம் கலந்து தெளிக்க வேண்டும். தேயிலை கொசுவை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீரில் புரபனோபாஸ் மருந்தை 1.5 மி.லி கலந்து வளர் பருவத்தில் தெளிக்க வேண்டும். 15 நாள் இடைவெளியில் ஒருலிட்டர் நீரில் 5 மி.லி., குளோரிபைரிபாஸ் கலந்தும், அதன்பின் 15 நாளில் ஒரு லிட்டர் நீரில் பேசலோன் 2.மி.லி., கலந்து தெளிக்க வேண்டும் என கூறினர்.