வேடசந்தூர்: வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக நவீன நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை (ஆர்த்ராஸ்கோபி) செய்யப்பட்டது.திண்டுக்கல் சவேரியார்பாளையத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் 31. கூலித்தொழிலாளி. விபத்தில் முழங்கால் முறிவு ஏற்பட்டு, இரண்டு ஆண்டுகளாக நடக்க முடியாமல் அவதிப்பட்டார். வேடசந்தூர் அரசு மருத்துவமனையில், நவீன நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை மூலம் முழங்கால் முறிவு முற்றிலும் சரி செய்யப்பட்டுள்ளது. டாக்டர்கள் நவீன்குமார், லோகநாதன், சிராஜ்தீன், செவிலியர் பழனியம்மாள் ஆகியோர் இந்த நவீன அறுவைசிகிச்சையை செய்துள்ளனர்.தலைமை மருத்துவர் அன்புச்செல்வன் கூறியதாவது: தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் செலவாகும். இங்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டது. மாவட்ட அளவில் இது முதன்முறை, என்றார். இணை இயக்குனர் பாக்கியலட்சுமி மருத்துவ குழுவினரை பாராட்டினார்.