குடும்பத்தலைவி, எழுத்தாளர், ஓவியர், யூ டியூப்பர், தன்னம்பிக்கை பேச்சாளர், ஆன்மிக ஆர்வலர், ஆரி டிசைனர், வீணை இசை கலைஞர் என பல பன்முகத் திறமைகள் நிரம்பியவராக திகழும் மதுரை நிரஞ்சனா கார்த்திகை ராஜன் கூறியதாவது'' எம்.பி.ஏ., முடித்து, சோகோ கார்ப்பரேஷனில் பணியாற்றிய நான், பக்தி மார்க்கத்தில் பயணிக்க தொடங்கி ஆண்டுகள் பல ஓடிவிட்டன.என் திருமண பத்திரிக்கையில் கூட ஆண்டாள் திருக்கல்யாண வைபவ நிகழ்வை அச்சிட்டிருந்தேன். ஆண்டாள் கல்யாணத்தில் தொடர்பில்லாத ராமானுஜர், தியாகராஜபாகவதர் படங்களையும் அதில் இடம் பெற செய்தேன். இதற்காக நாச்சியார் திருமொழி, வாரணம் ஆயிரம் என பல பக்தி இலக்கியம் படித்தேன்.இரண்டு ஆண்டுகளாக தஞ்சை ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டுகிறேன். ஓவியம் வரைவதும் தவம் செய்வது போல் என்பதால் மனநிறைவு தருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 4.5 அடி உயரம் 'கிருஷ்ண லீலா'வை தஞ்சை ஓவியமாக தீட்டினேன். கிருஷ்ணர் பிறப்பு முதல் வளர்ப்பு வரை 10 காட்சிகளை வரைந்துள்ளேன்.இந்த ஓவியத்திற்காக பெரியாழ்வார் திருமொழி, திவ்யபிரபந்தம் படித்து அதில் உள்ள தகவல்களை உள்வாங்கி வரைந்தேன். ஆன்மிக ஆர்வத்தால் இது போல் ஓவியம் வரைவதோடு நம் மதுரையின் ஆன்மிகம், பாரம்பரியம், பண்பாட்டு பெருமைகளை மொரிசீயஸ், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு இதழ்களில் எழுதி வருகிறேன்.இதற்கு இடையில் வீணை, ஆரி டிசைனிங் செய்வது பொழுது போக்கு.என் 'ரேண்டம் தாட்ஸ்' யூ டியூப் தளத்தில் தன்னம்பிக்கை கருத்துக்கள் பேசுகிறேன்.போட்டி தேர்வு உட்பட மாணவர்கள் மன நிலை சீராக்கும் தகவல்களையும் எடுத்துரைக்கிறேன். குடும்பத் தலைவி என வீட்டில் முடங்காமல் குடும்ப பொறுப்பு, தனி திறமைகளில் நான் முன்னேற குடும்பம் உறுதுணையாக இருப்பது பெரும் வரம்'' என்றார்.