மதுரை:பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கியதற்காக கார்டுக்கு ரூ.5 வீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ரேஷன்கடை பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மாநிலத்தில் கூட்டுறவு, நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் வாயிலாக பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.இதற்காக கார்டுக்கு 50 காசு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இது மிகவும் குறைவாக இருப்பதால் கார்டுக்கு ரூ.5 வழங்க வேண்டும் என பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழ்நாடு அரசு ரேஷன் பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: 21 வகையான பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள், இலவச வேட்டி, சேலைகளை பணியாளர்கள் குடோன்களுக்கு சென்று எடுத்து கடைகளுக்கு கொண்டு வந்து விநியோகித்தனர். பத்து நாட்களாக இப்பணியில் அவர்கள் கடுமையாக ஈடுபட்டனர். ஆனால் இதற்காக பயணப்படி வழங்கவில்லை. எனவே கார்டுக்கு ரூ.5 வீதமும், தனியாக ரூ.2500ம் ஊக்கத் தொகையாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்றார்.