மதுரை, ஜன.23-
தற்கொலை செய்த தஞ்சாவூர் மாவட்ட பள்ளி மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.17 வயது மாணவி மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கியிருந்தார். மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மகளை வீட்டிற்கு தந்தை அழைத்து சென்றார். மாணவியின் உடல்நிலை மோசமானதால் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விடுதி அறைகளை சுத்தம் செய்யுமாறு வார்டன் கொடுமைப்படுத்தியதால், மன உளைச்சலில் பூச்சி மருந்து குடித்ததாக டாக்டர்களிடம் மாணவி கூறினார். திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரித்தனர். வார்டன் சகாயமேரியை கைது செய்தனர். மாணவி இறந்தார். சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணை கோரி மாணவியின் தந்தை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். நேற்று முன்தினம் அவசர வழக்காக விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக மாணவி கூறியதை வீடியோ பதிவு செய்தவர் மற்றும் மாணவியின் பெற்றோருக்கு போலீசார் அழுத்தம் கொடுப்பதாக மனுதாரர் தரப்பு கூறுகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழாதவாறு போலீசார் நடந்து கொள்ள வேண்டும்,' என்றார்.நேற்று விடுமுறை நாளில் மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவசர வழக்காக விசாரித்தார்.நீதிபதி: சமூக வலைதளங்களில் வீடியோ பரவியுள்ளது. அது எத்தகைய சூழலில் எடுக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப் படும் என போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் உடல் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மரணம் குறித்து வேறு சந்தேகம் எதையும் எழுப்பவில்லை. எனவே, மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. மாணவியின் எவ்வித அடையாளமும் வெளியில் தெரியாத வகையில் பாதுகாக்கப்பட வேண்டும். எத்தகைய சூழலில் மாணவி இறந்தார் என்பதை கண்டறிவதில் போலீசார் கவனம்செலுத்த முயற்சிக்க வேண்டும். மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக் கொண்டு, பாரம்பரிய முறைப்படி சொந்த ஊரில் இறுதிச் சடங்கு மேற்கொள்ள வேண்டும். சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தேவையான உதவிகளை அரசுத் தரப்பில் செய்ய வேண்டும். மாணவியின் மரணம் குறித்து பெற்றோர் தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் முன் ஆஜராகி வாக்கு மூலம் அளிக்க வேண்டும். அதை 'சீல்' இடப்பட்ட உறையில் வைத்து அரசுத் தரப்பில் நாளை (ஜன.,24) தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.உடலை பெற்ற பெற்றோர் உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடலை பெற்றோர் நேற்று வாங்கிக் கொண்டனர். கலால் பிரிவு டி.எஸ்.பி., மோகன்தாஸ் தலைமையில், 30 போலீசார் பாதுகாப்போடு மாணவி உடல், சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.மாணவி உடல், அவரதுசொந்த ஊரான வடுகபாளையத்தில் நேற்று மாலை அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இடுகாட்டில், நேற்று இரவு 7:00 மணியளவில், மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.பா.ஜ., ஆர்ப்பாட்டம்பா.ஜ., மாநில துணைத் தலைவர் முருகானந்தம் தலைமையில், பா.ஜ., முன்னாள் தேசியக்குழு உறுப்பினர் எச்.ராஜா, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்பினர், நேற்று தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.எச்.ராஜா கூறுகையில், ''மாணவி தற்கொலையில் மதமாற்றம் இல்லை என எஸ்.பி., கூறியது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. மாணவி இறந்த வழக்கை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும். மாணவி குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,'' என்றார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எச். ராஜா உள்ளிட்ட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.