திருப்பூர்,:கேரளாவில் மாவட்டங்களுக்கு இடையிலும், அங்கிருந்து தமிழகத்துக்கும் பாசஞ்சர் ரயில்கள் வந்து செல்லும் நிலையில், தமிழகத்தில் குறிப்பாக, மேற்கு மண்டலத்தில் மட்டும் பாசஞ்சர் ரயில் இயங்க அனுமதி வழங்காதது, சீசன் டிக்கெட்தாரர்களை கவலையடைய செய்துள்ளது.திருப்பூரில் இருந்து கோவை மற்றும் ஈரோட்டுக்கு பஸ்சில் பயணிக்க, ஒரு மணி நேரம், 35 நிமிடமாகும்; ரயிலில், 50 நிமிடங்களில் சென்று விடலாம்; அலைச்சலும் குறைவு. இதனால், பாசஞ்சர் ரயிலில் சீசன் டிக்கெட் பெற்று, திருப்பூரில் இருந்து கோவை மற்றும் ஈரோட்டுக்கு தினசரி, 4,000 பேர் காலை, மாலையில் பயணித்து வந்தனர்; திருப்பூருக்கு, 2,000 பேர் வரை பாசஞ்சரில் வந்திறங்குகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த, 2020ல், ஈரோடு - கோவை (வழி: திருப்பூர்), சேலம் - கோவை (வழி: ஈரோடு, திருப்பூர்) பாசஞ்சர் ரயில் நிறுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளை கடந்தும் பாசஞ்சர் மீண்டும் இயக்குவது குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை.அதே நேரம், கேரள மாநிலத்தின் கண்ணுார், சொர்ணுார், பாலக்காடு பகுதியில் இருந்து கோவைக்கும், கேரளா மாநிலத்தின் பிற பகுதிக்கும் பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் முன்பதிவு செய்ய வேண்டியதில்லை என்பதால், உடனடி ரயில் பயணத்தால், அங்குள்ள ரயில் பயணிகள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அதே நேரம், மேற்கு மண்டலத்தின் மூன்று மாவட்டங்களை இணைக்கும் பாசஞ்சர் ரயில் இயக்கம் குறித்து சேலம் கோட்ட அதிகாரிகள் வாய் திறக்காமல் உள்ளனர். 'சீசன் டிக்கெட் பெற்று காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் வசதிக்காக, பாசஞ்சர் ரயில் குறித்து அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும்.தொடரும் பக்தர்களின் வேதனைசபரிமலைக்கு திருப்பூரில் இருந்து ரயில் மூலம் செல்ல பக்தர்கள் பலரும் முன்பதிவு செய்ய வருகின்றனர். சபரிமலைக்கு அறிவிக்கப்படும் சிறப்பு ரயில்கள் திருப்பூரில் நிற்காமல், ஈரோட்டில் இருந்து நேராக கோவை சென்றடையும் வகையில், கால அட்டவணை தயாரிக்கப்படுகிறது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட காக்கிநாடா - கொல்லம், கச்சிக்குடா - கொல்லம், செகந்திராபாத் - கொல்லம் ரயில்கள் திருப்பூரில் நிற்காமல் பயணித்தன. இது, பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது.