திருப்பூர்:திருப்பூர் ஐ.டி.ஐ., வளாகத்தை கொரோனா வார்டுக்கு தயார் படுத்தும் பணி துவங்கியது.தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளாக தடுப்பூசி முகாம்கள், தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார துறையினர் வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கண்காணித்தும் வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய நபர்களுக்கு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.இது தவிர இரு தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.இது தவிர மாநகராட்சி பகுதியில், மைய அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுகிறது.மேலும், 4 நான்கு மண்டலங்களிலும் தலா ஒரு வழிகாட்டுதல் மற்றும் தொற்று கண்டறியும் மையம் காலை முதல் மாலை வரை இயங்குகிறது.மேலும், திருப்பூர் சேவா சமிதி, நஞ்சப்பா பள்ளி, சிக்கண்ணா கல்லுாரி ஆகியன கொரோனா சிகிச்சை வார்டுகளாக, படுக்கை களுடன் தயார் நிலையில் உள்ளன.இந்நிலையில் கடந்த முறை கொரோனா பரவலின் போது, ஆக்கிஜன் வசதியுடைய படுக்கைகள், திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில் ஏற்படுத்தப்பட்டன. தற்போது இம்மையம் அதே பயன்பாட்டுக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மையம் அமைப்பதற்கான முதல் கட்டப் பணிகள் துவங்கியுள்ளன.மேலும், தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு ஐ.டி.ஐ., வளாகமும் சிகிச்சை மையத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார், நகர் நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் ஆகியோர் நேற்று ஐ.டி.ஐ., வளாகத்தில் சென்று மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர்.தொற்று பாதிப்பு அதிகரித்து கூடுதல் படுக்கைகள் தேவைப்படும் நிலையில் இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.