பெசன்ட்நகர் : கடற்கரை பகுதிகளில், ஆமை முட்டைகள் சேகரிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரம், 20 நாட்களில் 10க்கும் மேற்பட்ட ஆமைகள், மீன்பிடி வலைகளில் சிக்கி உயிரிழந்துள்ளன.
கடல் ஆமைகள் ஜன., முதல் மார்ச் வரை, கரையில் வந்து மணலில் குழி தோண்டி முட்டையிட்டு, மூடி வைத்துச் செல்லும். ஒரு ஆமை, 170 முட்டைகள் வரை இடும்.இந்த முட்டைகளை நாய், பறவைகளிடம் இருந்து பாதுகாக்க, வனத்துறையினர் ஆண்டுதோறும் முட்டை பொரிப்பகம் அமைக்கின்றனர்.இதற்காக பெசன்ட் நகர், நீலாங்கரை, கோவளம் மற்றும் பழவேற்காடு ஆகிய கடற்கரைகளில், ஆமை முட்டை பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு 70 ஆமைகள், 7,911 முட்டைகள் இட்டுச் சென்றன. இந்த ஆண்டுக்கான முதல் ஆமை, கடந்த 11ம் தேதி பெசன்ட்நகர் கடற்கரைக்கு வந்து, 110 முட்டைகளை இட்டுச் சென்றது. நேற்று வரை, 1,500 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, வன உயிரின காப்பாளர் பிரசாந்த் கூறியதாவது:பெசன்ட் நகர் கடற்கரையில் தான், அதிக எண்ணிக்கையில் ஆமைகள் முட்டையிடும். எவ்வளவு ஆமைகள் வந்தாலும், அதற்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.ஆமை முட்டைகளை பாதுகாக்கும் திட்டத்திற்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், 'ஸ்பான்சர்' செய்துள்ளது.மீன்பிடி வலைகளால், 20 நாட்களில், 10க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கிஉள்ளன.எனவே, மீனவர்கள் பயனற்ற வலைகளை கரைக்கு கொண்டு வந்து போட வேண்டும். இது தொடர்பாக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.