பூந்தமல்லி : பூந்தமல்லியில், மாணவியை கர்ப்பமாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.பூந்தமல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், சில நாட்களுக்கு முன் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:என்னுடைய 14 வயது மகள், அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா நேரத்தில், பள்ளிக்கு செல்லாமல் ஆன்-லைனில் பாடங்களை கவனித்து வந்தார்.அப்போது, மொபைல் போன் மூலம் பழக்கமான நபர், என் மகளை காதலித்து வந்தார். இதை நான் கண்டித்தேன். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், பள்ளி திறந்த போது, அந்த நபர், என் மகளை, ஆவடி பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று, ஆசை வார்த்தை கூறி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுஉள்ளார்.
தற்போது மகள் கர்ப்பமாக உள்ளார். இதற்கு காரணமான அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டது. கர்ப்பத்திற்கு காரணமான அந்த நபர் குறித்து, மாணவி எந்த தகவலும் தெரிவிக்காத நிலையில், தாய் புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, அந்த நபரை தேடி வருகின்றனர்.