தாம்பரம் : வண்டலுார் பூங்காவிலுள்ள விலங்குகளுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் சிங்கம், புலி, சிறுத்தைகளுக்கு தொற்று பாதிப்பு இல்லை என, தெரியவந்துள்ளது.முன்னெச்சரிக்கைதெற்கு ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான வண்டலுார் உயிரியல் பூங்காவில், ௧,300க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.
இங்கு, 500க்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.இந்நிலையில், ஜன., 13ம் தேதி, 352 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 70 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, மற்ற பணியாளர்களுக்கும், விலங்குகளுக்கும் தொற்று பரவுவதை தடுக்க, தொற்று உறுதியானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.விலங்குகளின் நலன் கருதி, அவற்றுக்கும் தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜன., 17 முதல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அத்துடன், 11 சிங்கம், 4 சிறுத்தை, 6 புலிகள் உட்பட, 21 பூனை இனங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்காக, குஜராத் மாநிலம், போபாலில் உள்ள விலங்கு நோய்களுக்கான உயர் பாதுகாப்பு தேசிய நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன.தொற்று இல்லைதற்போது, பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. அதில், மாதிரிகள் சேகரிக்கப்பட்ட அனைத்து விலங்குகளுக்கும் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.