அவதுாறு பரப்பிய மூவர் சிக்கினர்மணலி: மணலியைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்கு, திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அப்பெண் குறித்து, அதே பகுதியைச் சேர்ந்த மூவர், அவதுாறு பரப்பியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், பெண் குறித்து அவதுாறு பரப்பிய மணலியைச் சேர்ந்த திலீப்குமார், 30, மங்கலிகல், 46, மாணிக்சந்த், 32, ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரூ.1.87 லட்சம் மோசடிதிருவொற்றியூர்: செங்கல்பட்டு, தாங்கல் சாலையைச் சேர்ந்த ராகுல், 26. இவருக்கு பழக்கமான திருவொற்றியூரைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர், தன் தோழி துபாயில் உள்ளதாகவும், அவரது சலுான் கடையில் பணியாற்ற மேலாளர் தேவை என கூறியுள்ளார். ராகுலும், வெளிநாடு செல்ல சம்மதித்து, தனலட்சுமியிடம் 25 ஆயிரம் ரூபாயும், வங்கியில் 1.62 லட்சம் ரூபாயும் செலுத்தியுள்ளார். பின், ராகுல் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், தனலட்சுமி பேசுவதை தவிர்த்துள்ளார். சந்தேகமடைந்த ராகுல், திருவொற்றியூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், தலைமறைவாக இருந்த திருவொற்றியூரைச் சேர்ந்த தனலட்சுமி, 46, வெங்கடேசன், 46, ஆகியோரை நேற்று காலை கைது செய்தனர்.நள்ளிரவில் வாலிபருக்கு வெட்டுஅண்ணா நகர்: அண்ணா நகர், கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் சிவா, 22. இவர், நேற்று அதிகாலை 1:30 மணிக்கு, அவரது நண்பர் சிலம்பரசன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில், அண்ணா நகர், 'ஜி' பிளாக் அருகே சென்றார். அங்கு வந்த மூன்று பேர், சிவாவை வழிமறித்து சரமாரியாக வெட்டி தப்பினர். படுகாயமடைந்த சிவா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அண்ணா நகர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அயனாவரத்தைச் சேர்ந்த ரவுடி கிருபாநிதி, 20, என்பவர் முன்விரோதம் காரணமாக, சிவாவை வெட்டியது தெரிய வந்தது. கிருபாநிதி உட்பட தலைமறைவாக உள்ளோரை, போலீசார் தேடி வருகின்றனர். மொபைல் போன் உதிரிபாகம் திருட்டுசிந்தாதிரிப்பேட்டை: சிந்தாதிரிப்பேட்டை, அத்திப்பட்டான் தெருவில் மொபைல் போன் உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்துபவர் ராமராம், 27. நேற்று முன்தினம் மாலை, இவரது கடைக்கு தரமணியில், மொபைல் போன் பழுது பார்க்கும் கடை வைத்துள்ள சையத் அப்பாஸ், 38, என்பவர் உதிரிபாகங்கள் வாங்கிச் சென்றுள்ளார். அவர் சென்றதும், 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 65 'டிஸ்பிளே'க்கள் மாயமானது தெரிந்தது. சிந்தாதிரிப்பேட்டை போலீசார், தொடர்புடைய சையத் அப்பாசை நேற்று கைது செய்து, 'டிஸ்பிளே'க்களை பறிமுதல் செய்தனர்.நண்பரின் பல்லை உடைத்தவர் கைதுசென்னை: புரசைவாக்கம், பெருமாள்பேட்டையைச் சேர்ந்தவர் நாகரத்தினம்,48. இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், வேப்பேரி அருணாச்சலம் தெருவில் நடந்து சென்றார். அப்போது, எதிரே வந்த இவரது நண்பர் கோபி, ௩௧, வழிமறித்து மது அருந்த பணம் கேட்டார். நாகரத்தினம் மறுத்ததால், ஆத்திரமடைந்த கோபி திடீரென, நாகரத்தினத்தின் முகத்தில் குத்தி தப்பினார். இதில் பல் உடைந்தது. போலீசார் வழக்குப்பதிந்து, கொசப்பேட்டை, சச்சிதானந்தம் தெரு, குடிசை பகுதியைச் சேர்ந்த கோபியை நேற்று கைது செய்தனர்.பொறியாளர் துாக்கிட்டு தற்கொலைசென்னை: தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி ராஜா, 34; பொறியாளர். குடும்ப பிரச்னையால் வீட்டிலிருந்து வெளியேறி, திருவல்லிக்கேணியிலுள்ள விடுதியில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை வெகு நேரமாகியும் அறை கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தினர் திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கூறினர். போலீசார் வந்து, மற்றொரு சாவியால் கதவை திறந்த போது, கந்தசாமி ராஜா துாக்கில் பிணமாக தொங்கினார். போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
பெண்ணிடம் செயின் பறிப்பு
நீலாங்கரை: கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சந்திரா, 53. இவர், வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது ௨ சவரன் செயினை பறித்து தப்பினர். நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.ஐ.டி., ஊழியர் தற்கொலைபள்ளிக்கரணை: ஜல்லடியான் பேட்டையைச் சேர்ந்தவர் விவின், 35; ஐ.டி., நிறுவன ஊழியர். இவருக்கு மனைவி மற்றும் 2 வயது குழந்தை உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் மனைவி, குழந்தையை கொளத்துாரில் உள்ள மாமியார் வீட்டில் கொண்டு விட்டு வீடு திரும்பினார். நேற்று அவரது மனைவி மொபைல் போனில் பல முறை அழைத்தும் பதிலளிக்காததால், சந்தேகமடைந்து வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு விவின் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.போதை பொருள் விற்ற 9 பேர் கைதுபுதுவண்ணாரப்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை போலீசார், தண்டையார்பேட்டை மேம்பாலம் அருகில் கண்காணிப்பில் இருந்த போது, போதை மாத்திரைகளுடன் ஒருவர் பிடிபட்டார். விசாரணையில், தண்டையார்பேட்டை, அம்மணி அம்மன் தோட்டத்தைச் சேர்ந்த சதீஷ், 28, என்பது தெரியவந்தது.
போலீசார் நேற்று அவரை கைது செய்து, 2 கிலோ கஞ்சா மற்றும் போதைக்கு பயன்படுத்தும் உடல்வலி நிவாரணி நைட்ரோவிட் 1,260 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.மேலும், சதீஷ் கொடுத்த தகவலின்படி, அம்மணி அம்மன் தோட்டத்தைச் சேர்ந்த குருபிரசாத், 36, என்பவரை கைது செய்தனர். இருவரும், சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார்.
இதேபோன்று, வண்ணாரப்பேட்டை போலீசார், மூலக்கொத்தளம் சுடுகாடு அருகில், போதை மாத்திரைகள் விற்ற கேரளா, பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ரத்தேஷ் ராஜன், 34, தி.நகர், சாரதாம்பாள் தெருவைச் சேர்ந்த அகமது, 20, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன், 19, ஜாம்பஜாரைச் சேர்ந்த தாவூத் அகமது, 22, ஆகியோரை நேற்று கைது செய்து, 10 நைட்ரோவிட் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திக், 23, சத்யா, 24, சூர்யா, 21, ஆகியோரை கைது செய்து, ௧ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.