காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதுார் தாலுகா மதுரமங்கலம் கிராமத்தில், ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்து வைத்திருந்த, 5 கோடி ரூபாய் மதிப்பிலான, 5 ஏக்கர் அரசு நிலம், வருவாய் துறையினரால் நேற்று மீட்கப்பட்டது.'காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்நிலை புறம்போக்கு நிலங்கள் ஏராளமானவை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.
அவற்றில் சில நிலங்கள், வருவாய் துறையினரால் மீட்கப்பட்டு வருகிறது. இரு மாதங்களில் மட்டும், 270 கோடி ரூபாய் மதிப்பிலா அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா மதுரமங்கலம் கிராமத்தில் உள்ள, பிரபல ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்து வைத்திருந்த 5 ஏக்கர் ஏரி புறம்போக்கு நிலத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிகாரிகள், நேற்று அதிரடியாகமீட்டுள்ளனர்.இதன் மதிப்பு ஐந்து கோடி ரூபாய் என, வருவாய் துறையினர்தெரிவித்துள்ளனர்.படப்பை குணாவின் சொந்த ஊர் படப்பை அருகில் உள்ள சேத்துப்பட்டு கிராமம்.
ஆனால், அவரது மனைவியின் ஊரான மதுரமங்கலத்தில், வீடு கட்டி வசித்து வருகிறார். அங்கு, ஏரிக்கரை ஓரமாக உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. ஏற்கனவே, படப்பை குணாவின் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரையின் தனிப்படை போலீசார் இயங்கி வரும் நிலையில், வருவாய் துறையும் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.