காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த காவாந்தண்டலம் - மாகரல் இடையே சேதமடைந்த சாலையில், தற்காலிக சீரமைப்பு பணி நடந்து வருகிறது.காஞ்சிபுரம் செய்யாற்றில், நவம்பர் மாத வெள்ளத்தில் மாகரல் - காவாந்தண்டலம் இடையே, சாலையில் அரிப்பு ஏற்பட்டு உடைந்தது;
பேருந்து போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.தற்போது, பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் மண், கற்கள் கொட்டி, தற்காலிக போக்குவரத்துக்கான பணி நடந்து வருகிறது. நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ஒருவர் கூறியதாவது:செய்யாற்றின் கரையோரம் மணல் எடுக்கப்பட்டதால், சாலையில் உடைப்பு ஏற்பட்டது. ஆற்றில் இருந்து, 32 அடி வரை பள்ளம் ஏற்பட்டது. சாலை பாதிப்பு நீளம் 400 மீட்டர். தற்காலிக பணிக்கு 46 லட்சம் ரூபாய் செலவில் வேலை நடந்து வருகிறது. ஆற்றின் கரையோரம் தடுப்பு அமைத்து, சாலை பணி முழுமையாக முடிய, இன்னும் இரு மாதங்கள் ஆகும்.இந்த வேலை முடிந்ததும் தார் சாலை அமைக்க, தனியாக நிதி ஒதுக்க வேண்டும். பின், 'டெண்டர்' விட்டு, பணி துவக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.