காஞ்சிபுரம் : கொரோனா ஊரடங்கால் கூரத்தாழ்வான் திருஅவதார உற்சவத்தில், தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால், கோவில் தேர் போன்று அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், கூரத்தாழ்வான் எழுந்தருளி அருள்பாலித்தார்.காஞ்சிபுரம் அடுத்த, கூரம் கிராமத்தில், ஆதிகேசவப்பெருமாள் மற்றும் ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வான் கோவில் உள்ளது.
ஆண்டுதோறும் தை மாதத்தில் கூரத்தாழ்வானின், திரு அவதார உற்சவம், 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி நடப்பாண்டு, 1,012வது உற்சவம் கடந்த 14ல் துவங்கியது.உற்சவத்தின்போது, கூரத்தாழ்வான் காலையில் பல்லக்கிலும், மாலையில் ஸிம்மம், யாழி, சூரியபிரபை, குதிரை வாகனம், சந்திரபிரபை, யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி கிராமத்தில் உள்ள முக்கிய வீதி வழியாக உலா வருவது வழக்கம்.இதில் 9ம் நாள் பிரபல உற்சவத்தின்போது, காலை தேரோட்டம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
நடப்பாண்டு, கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் நடத்த, மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.இதனால், கூரத்தாழ்வான், தினமும் வீதியுலாவின்போது, அந்தந்த வாகனத்தில் எழுந்தருளி, கோவில் மண்டபத்தில் அருள்பாலித்தார்.அதன்படி 9ம் நாள் பிரபல உற்சவமான நேற்று தேரோட்டம் நடைபெறவில்லை. மாறாக, கோவில் மண்டபத்தில், தேரில் உள்ளதைப்போன்று குதிரை வாகனத்துடன், வாழைமர தோரணம் கட்டப்பட்டு, அலங்கார தொம்பைகளால் அலங்கரிக்கப்பட்டு, அதில் கூரத்தாழ்வான் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.