வானுார், : ஆரோவில் அருகே பன்றிகளைப் பிடிக்க வைக்கப்பட்ட நாட்டு வெடி வெடித்து நாய் இறந்ததில் நரிக்குறவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் திருப்பதி நகரைச் சேர்ந்தவர் பலராமன், 49; இவர், இறைச்சிக்காக பன்றிகளை நாட்டு வெடி வைத்து பிடித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் திருச்சிற்றம்பலம் சுடுகாட்டுப் பாதை அருகே புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சேர்ந்த நரிக்குறவர் ரவி, 55; என்பவர் மூலம் நாட்டு வெடிகளை தயார் செய்து, அதில் கோழிக்குடலைச் சுற்றி வைத்துள்ளார்.நேற்று காலை 8:00 மணிக்கு, அவ்வழியாகச் சென்ற நாய், வெடியில் இருந்த கோழிக்குடலை சாப்பிடும் போது, வெடித்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தது.இது குறித்து அப்பகுதி மக்கள் ஆரோவில் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அனுமதியின்றி நாட்டு வெடிகளை தயார் செய்து, பன்றிகளை படித்தது தெரியவந்தது.திருச்சிற்றம்பலம் வி.ஏ.ஓ., தமிழிசை, 22; அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, பலராமன், ரவி, ஆகியோரை கைது செய்தனர்.