மறைமலை நகர் : பனி காலம் முடியும் முன்னரே, வெயில் வாட்டி வதைப்பதால், சிங்கபெருமாள்கோவில் ஜி.எஸ்.டி., சாலை ஓரத்தில், நுங்கு விற்பனை ஜோராக நடைபெறுகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் கன மழை பெய்தது. மழைக்காலம் முடியும் முன் பனிப்பொழிவு துவங்கியது.தற்போது, காலை 8:00 மணி வரை பனிப்பொழி இருந்தாலும், மதியம் கடுமையான வெயில் அடிக்கிறது.
இதை சமாளிக்க, சிங்கபெருமாள் கோவில், ஜி.எஸ்.டி., சாலையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நுங்கு மற்றும் பதநீர் விற்பனை சூடுபிக்கத் துவங்கியுள்ளது.இது குறித்து நுங்கு வியாபாரி கூறியதாவது:செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தான், நுங்கு அதிகமாக கிடைக்கும். அதனால், சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பெரிய லாரிகளில் மொத்தமாக எடுத்து வந்து, சிறிய வாகனங்களில் பல இடங்களில் நுங்கு விற்பனையை துவக்கியுள்ளோம்.நுங்கு, இயற்கையாக கிடைக்கும்; குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு. எந்த கலப்படமும் இல்லாத காரணத்தால் மக்களும் விரும்பி வாங்குவர்.தற்சமயம் பனிப்பொழிவு காரணமாக, காலை நேரத்தில் விற்பனை மந்தமாக உள்ளது. மதிய நேரத்தில் நன்றாகவே இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.