ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு நிரந்தர இடம் தேர்வு செய்வது தொடர்பாக, ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கடந்த 2020-2021ம் கல்வியாண்டில் துவங்கப்பட்டது. தற்காலிகமாக அரியலுார் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு, 10 வகுப்பறைகள் ஒதுக் கப்பட்டது. இக்கல்லுாரியில் பி.ஏ., தமிழ், பொருளாதாரம், வணிகவியல், பி.எஸ்சி., கணினி அறிவியல், புள்ளியியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் உள்ளன.கடந்த கல்வியாண்டில் 278 பேர், நடப்பு கல்வியாண்டில் 285 பேர் என மொத்தம் 563 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். முதல்வர் உட்பட 6 பேராசிரியர்கள், 1 கவுரவ விரிவுரையாளர் கல்லுாரியில் பணிபுரிகின்றனர்.
கல்லுாரிக்கென நிரந்தர கட்டடம் இல்லாததால் கணினி ஆய்வகம், நுாலகம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படவில்லை. குறிப்பாக, போதுமான அளவிற்கு கழிவறைகள் கூட இல்லை.இந்நிலையில், கல்லுாரிக்கான நிரந்தர இடம் தேர்வு செய்யும் பணி நேற்று முன்தினம் நடந்தது.
சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், கல்லுாரி முதல்வர் ரேவதி, வருவாய் ஆய்வாளர்கள் சதீஷ்குமார், வி.ஏ.ஓ., சைமன்குமார், கிராம உதவியாளர் பாண்டியன் ஆகியோர் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.ரிஷிவந்தியம் - எறையூர் சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், மையனுார் - விரியூர் சாலையில் அரசுக்கு சொந்தமான 5.50 ஏக்கர் தரிசு நிலத்தையும், அரும்பராம்பட்டு - மூங்கில்துறைப்பட்டு செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் தரிசு நிலம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.ஆய்வு செய்த இடங்களின் விபரங்கள் குறித்து, பொதுப்பணித்துறை (கட்டடம்) அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும். அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே, கல்லுாரிக்கான நிரந்தர இடம் தேர்வு செய்யப்படும்.