மயிலம் : மயிலம் அருகே பைக்கில் குட்கா பொருட்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.மயிலம், புதுச்சேரி சாலையில் தென்கொளப்பாக்கம் கிராமத்தில் நேற்று மாலை 6:00 மணியளவில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக சாக்குமூட்டையுடன் பைக்கில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.மூட்டையில் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 53 கிலோ குட்கா பொருட்கள் கொண்டு வந்தது தெரியவந்தது. உடன் குட்கா பொருட்களை கடத்தி வந்த வானுார், மயிலம் ரோட்டைச் சேர்ந்த சம்மந்தம், 55; கூட்டேரிப்பட்டு பாண்டுரங்கன், 32; ஆகிய இருவரையும் கைது செய்து, பைக் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.