சென்னையில், 10 ஆயிரத்து 675 தெருக்களில் வசிப்பவர்களிடம் கொரோனா தொற்று பரவி உள்ளது. தற்போது, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு காரணமாக, சென்னையில் சில நாட்களாக தொற்று பரவல் வேகம் குறைந்து வருகிறது. இதனால் அடுத்தடுத்த பண்டிகையால் தொற்று கணிசமாக உயரும் என்ற பீதி நீங்கி உள்ளது.
சென்னை மாநகராட்சியில், 2021 டிச., 25ம் தேதி வரை தினசரி கொரோனா பாதிப்பு, 150 என்ற எண்ணிக்கையில் இருந்தது. அதன்பின், டிச., 26ம் தேதிக்கு பின், மூன்றாம் அலை கொரோனா பரவல் துவங்கியது. ஒமைக்ரான் வகை கொரோனாவால், கிடுகிடுவென பரவிய கொரோனா பாதிப்பு, 9,000த்தை நெருங்கியது. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், பொங்கல் விடுமுறைக்காக, சென்னையில் இருந்து ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர், சொந்த ஊர்களுக்கு சென்றனர். மேலும், ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு ஊரடங்கு காரணமாக, மக்கள் ஒன்றாக கூடும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் தடைப்பட்டன.மேலும், பொதுமக்களும், வீடு, அலுவலகம், மார்க்கெட் போன்ற இடங்களுக்கு மட்டும் சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால், சென்னையில் சற்று குறைய துவங்கிய கொரோனா பாதிப்பு, கிராமங்களில் அதிகரித்து வருகிறது.
தற்போதைய சூழலில், சென்னை மாநகராட்சியில், 7,000 பேர் என்ற எண்ணிக்கையில் தினசரி பாதிப்பு உள்ளது. அதே நேரம், 10 ஆயிரத்து 675 தெருக்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.அதிகபட்சமாக, தேனாம்பேட்டையில் 1,315; அடையாறில் 1,270; தண்டையார்பேட்டையில் 1,023 தெருக்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. தொற்று பாதித்தவர்களில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில், 5,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளிலும், 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், வீட்டு தனிமை மற்றும் கொரோனா சிகிச்சை கவனிப்பு மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
பொங்கல் பண்டிகையால் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், சென்னையில் தொற்றின் வேகம் குறைவதால், மக்களின் பீதி நீங்கி உள்ளது.
இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:சென்னையில் கொரோனா பாதித்தவர்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தி வருகிறோம். குறிப்பாக, ஒருவர் சாதாரண காய்ச்சலுக்கு, அருகில் உள்ள மருத்துவமனை அல்லது கிளினிக் சென்றாலும், அவரின் விபரம் பெற்று, அவருக்கு மாநகராட்சி சார்பில் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், பரிசோதனை முடிவுக்கு முன், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால், அவர்கள் வாயிலாக மற்றவர்களுக்கு தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது.
தற்போதைய சூழலில், சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் குறைவது மக்களின் ஒத்துழைப்பில் தான் உள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு, உணவு, தண்ணீர் கொடுக்க வேண்டுமென்றாலும், முக கவசம் அணிந்து தான் செல்ல வேண்டும். மாநகராட்சி சார்பில் வழங்கப்படும், பாராசிட்டாமல், வைட்டமின் சி, ஜின்க் ஆகிய மாத்திரைகளை, தொற்று பாதித்தவருடன் வீட்டில் இருப்பவர்களும் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதால் பாதிப்பில்லை. தொற்று அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆம்புலன்ஸ் போன்ற உதவி தேவை என்றால், '108' ஆம்புலன்ஸ் சேவைபோல், '1913' என்ற எண்ணிலும், சென்னை மக்கள் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
கோடம்பாக்கம் தப்பியது எப்படி?
சென்னையில், மக்கள் அடர்த்தி மற்றும் வணிகம் நிறைந்த மண்டலமாக கோடம்பாக்கம் மண்டலம் உள்ளது. இந்த மண்டலத்தில், தி.நகர், கோயம்பேடு போன்ற வணிகம் நிறைந்த பகுதிகளுக்கு, தினசரி லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வர். அதனால், முதல் மற்றும் இரண்டாம் அலையின்போது, கோடம்பாக்கம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது.தற்போது, 8.1 சதவீதம் என்ற அளவில் பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.
மேலும், 651 தெருக்களில் மட்டுமே இம்மண்டலத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது. தொற்று பாதிப்பு குறைவுக்கு, அப்பகுதியில் முதல் மற்றும் இரண்டாம் அலை தொற்றால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு திறன் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.மேலும், அப்பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் எந்த மண்டலத்தில் வசிக்கிறார்களோ, அந்த மண்டலத்தில் தான், அவர்களின் தொற்று பாதிப்பு விபரம் சேர்க்கப்படுவதும், அந்த மண்டலத்தில் தொற்று பாதிப்பு குறைந்திருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.
- நமது நிருபர் -