ஈரோடு: ஈரோட்டில், ஓடும் ரயிலில் இருந்த விழுந்த தொழிலாளியை, பாதுகாப்பு படை போலீசார், சமயோசிதமாக செயல்பட்டு காப்பாற்றினர். செகந்திராபாத் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு, 21ம் தேதி மாலை வந்தது. சில நிமிடங்கள் நின்ற நிலையில் மீண்டும் கிளம்பியது. முன்பதிவு பெட்டியில், அசோக்தாஸ் என்ற வாலிபர் பயணித்தார். ஈரோட்டில் ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்க்கும் அவர், விடுமுறைக்காக ஊருக்கு சென்ற நிலையில், மீண்டும் ஈரோடு திரும்பினார். அலுப்பில் தூங்கி கொண்டிருந்த அசோக்தாஸ், கண் விழித்து பார்த்தபோது, ரயில் சென்று கொண்டிருந்தது. பரபரப்பாகி அதிர்ச்சி அடைந்து, அடித்துப்பிடித்து எழுந்து, உடைமைகளை வெளியே தூக்கி வீசிவிட்டு, ரயிலில் இருந்து இறங்க முயன்றார். அப்போது தவறி நடைமேடை, ரயில்பெட்டி இடையே விழுந்து, தொங்கியபடி சென்றார். அப்போது பணியில் ஈடுபட்டிருந்த, ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர்கள் பழனிசாமி, கிருஷ்ணன் துரிதமாக செயல்பட்டு, அசோக்தாஸை லாவகமாக பிடித்து வெளியே இழுத்து காப்பாற்றினர். பயணியை காப்பாற்றிய போலீசாருக்கு, பல்வேறு தரப்பினரும், பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.