சேலம்: சேலம், கருப்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன், 45. இவர் இறந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. அத்துடன், அவரது குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்தியதாக கூறி, உண்மை கண்டறியும் குழு ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் சேலத்தில் நேற்று அளித்த பேட்டி: போலீசார் திட்டமிட்டு செயல்பட்டதால் பிரபாகரன் மரணம் நிகழ்ந்துள்ளது. கிளை சிறையில் அடைக்கப்பட்டு தாக்குதல் நடத்திய சிறை கண்காணிப்பாளர் தினேஷ் மீது நடவடிக்கை தேவை. நீதிமன்றத்தில் நிலைகுலைந்து விழுந்த பிறகும் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளி இறந்த தகவலை, உடனே அவரது குடும்பத்துக்கு போலீசார் தெரிவிக்காமல் கிளம்பி சென்றுவிட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை, வீடியோ பதிவு, இன்னும் அவரது குடும்பத்துக்கு வழங்கவில்லை. இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.