வீரபாண்டி: வீரபாண்டி, பலகான் தெருவை சேர்ந்தவர் சரோஜா, 53. இவர், 16.5 பவுன் தங்க நகை, 40 ஆயிரம் ரூபாய் மாயமானதாக, ஆட்டையாம்பட்டி போலீசாரிடம் தெரிவித்தார். ஊரக டி.எஸ்.பி., தையல்நாயகி தலைமையில் தனிப்படை போலீசார், புகார் கொடுத்தவர் வீட்டில் நேற்று சோதனை செய்தனர். அப்போது, பணம், நகைகளை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து டி.எஸ்.பி., தையல்நாயகி கூறுகையில், ''சமீபத்தில் ஆட்டையாம்பட்டியில் நகை மாயமானதாக புகார் அளிக்கப்பட்டவர் வீட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் தற்போது வீரபாண்டியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்கள், வீடுகளில் முழுமையாக பார்த்துவிட்டு திருட்டு போயிருந்தால் மட்டும் புகார் அளிக்க வேண்டும். தேவையின்றி போலீசாரை அலைய விடக்கூடாது,'' என்றார்.