கெங்கவல்லி: மொபட் - பைக் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரு தொழிலாளிகள் உயிரிழந்தனர். கெங்கவல்லி, நடுவலூர், மோட்டூரை சேர்ந்தவர் ராமர், 46. இவர், கெங்கவல்லி பேரூராட்சி அலுவலகம் அருகே, தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்துள்ளார். நேற்று காலை, 9:00 மணிக்கு, மனைவியை கடையில் விட்டுவிட்டு, டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., மொபட்டில் ராமர் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அதேநேரம், பெத்த நாயக்கன்பாளையம், திருமலைசமுத்திரத்தில் இருந்து கூலித்தொழிலாளி குமார், 45, 'பல்சர்' பைக்கில், கெங்கவல்லியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அரசு மருத்துவமனை வளைவு பகுதியில் வந்தபோது, மொபட் - பைக் நேருக்கு நேர் மோதியது. அதில் படுகாயமடைந்த ராமர், குமார், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின், மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் இருவரும் உயிரிழந்தனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.