சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, கான்கிரீட் கலவை வாகனம் கவிழ்ந்ததில், மூன்று பேர் பலியாகினர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, கோணமூலை ஊராட்சி நஞ்சப்பகவுண்டன் புதூரில், 20 நாட்களாக சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான சிமென்ட் கலவை, அரை கி.மீ., தூரத்தில் இருந்து கான்கிரீட் கலவை வாகனம் மூலம் தினமும் கொண்டு வரப் படுகிறது. நேற்று பகல், 12:00 மணியளவில், கான்கிரீட் கலவை வாகனம் வந்தது. தேனியை சேர்ந்த டிரைவர் கருப்புசாமி, 23; ஓட்டினார். தொழிலாளர்களான தாளவாடி, தலமலையை சேர்ந்த முத்து, 40; சத்தியை அடுத்த புதுக்கொத்துகாடு சரவணன், 35, ஆகியோர், வாகனத்தின் பின்புறம் நின்றபடி வந்தனர். இந்நிலையில் பின்னோக்கி வந்த வாகனம், எதிர்பாராதவிதமாக வலது பக்கம் கவிழ்ந்தது. இதில் டிரைவர், இரு தொழிலாளர் என மூவரும், வாகனத்தின் அடியில் சிக்கி, உடல் நசுங்கி பலியாகினர். அதேசமயம் வாகனத்தில் இடது பக்கம் அமர்ந்து வந்த, சத்தி, புதுக்கொத்துக்காட்டை சேர்ந்த சந்தோஷ்குமார், 25, கண்ணாடியை உடைத்து எட்டி குதித்து தப்பி விட்டார். விபத்தை தொடர்ந்து வேடிக்கை பார்க்க, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தி போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.