கோவை:கோவை வேளாண் பல்கலை நிர்வாகம், பாசன வாய்க்கால் மற்றும் வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளதாக தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி, தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு விவரம்:கோவை மாவட்டம், பேரூர் தாலுகா குமாரபாளையம் கிருஷ்ணாம்பதி குளத்தின் பாசன வாய்க்கால், வேளாண் பல்கலை நஞ்சை நிலங்கள் மற்றும் அருகேயுள்ள தலித் சமூகத்தினர், குறு விவசாயிகளுக்கு பாத்தியப்பட்டது. ஆனால், வேளாண் பல்கலை நிர்வாகம், பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து அந்த வழியாக பாசனத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல விடாமல் தடுத்து வருகிறது.வாய்க்கால் வழியாக வாகனங்கள் விவசாய பணிகளுக்கு செல்ல முடியாதவாறு வேலி அமைத்து தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் தலித் சமுதாயத்தினரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேளாண் பல்கலையின் இந்த நடவடிக்கை மீது அரசு துறையினர் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். இந்த விவகாரத்தில் முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.