வடமதுரை : பிலாத்து பகுதியில் அதிவேகமாக இயக்கப்படும் டிப்பர் லாரிகளால் மக்கள் அச்சத்துடன் வாழுகின்றனர்.
தென்னம்பட்டியில் இருந்து பிலாத்து, வாலிசெட்டிபட்டி, கம்பிளியம்பட்டி வழியே கொம்பேறிபட்டிக்கு மாவட்ட இதர சாலைகள் பிரிவில் இருக்கும் ரோடு உள்ளது. இப்பகுதியில் இருக்கும் ஓடைகள், குளங்களில் இருந்து மண், மணல் எடுக்க இப்பகுதியில் டிப்பர் லாரிகள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. அகலம் குறைவான ரோடு என தெரிந்தும் லாரிகள் அதிக வேகமாக இயக்கப்படுகின்றன.
இதனால் டூவீலர்களில் பயணிப்போர், ரோட்டோரங்களில் வசிப்போர் அச்சமடையும் வகையில் லாரிகளின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் அடிக்கடி இந்த லாரிகளை மறித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதும் நடக்கிறது. நேற்று முன்தினம் வாலிசெட்டிபட்டியை சேர்ந்த மகேந்திரன் குடும்பத்தினர், டிப்பர் லாரியின் அசுர வேகத்தினால் தடுமாறி டூவீலருடன் பள்ளத்தில் விழுந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் லாரிகளை மறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்னையில் நிரந்தர தீர்வு காண மாவட்ட உயர்அதிகாரிகளை சந்திப்பது என கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.