ரெட்டியார்சத்திரம் : 'புகார் பெட்டி, விழிப்புணர்வு விளம்பர பலகைகள்' வைத்து மாணவர்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க அரசு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதனை செயல்படுத்துவதில் அலட்சியம் நீடிக்கிறது. மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு உருவாக்குதல், புகார் பெட்டி வைத்தல், விழிப்புணர்வு விளம்பர பலகை அமைக்க உத்தரவிட்டது. ஆனால், பல பள்ளிகளில் இதுவரை இதற்கான நடவடிக்கை இல்லை. தற்போது மீண்டும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இதில், 'குழந்தைகளின் ஆரோக்கியம், பாதுகாப்பு மானியத்தின் 2வது தவணையில் இருந்து மாணவர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாணவர் மனசு புகார் பெட்டியும், தொடக்க பள்ளிகளில் 'என் பாதுகாப்புக்கு சில யோசனைகள்' என்ற தலைப்பிலும், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 'உன் பாதுகாப்புக்கு சில யோசனைகள்' என்ற தலைப்பிலும் விழிப்புணர்வு விளம்பர பலகை வைக்க வேண்டும். இவற்றை புகைப்படம் எடுத்து குறுவள மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.